பிரியாத நண்பர்கள்


ஒரு ஊரில் ஒரு அழகான தோட்டம் இருந்தது.  அந்த தோட்டத்தில் அழகான பூ ஒன்று இருந்தது. ஒரு நாள் ஒரு ஆட்டுக்குட்டி உணவு தேடி அந்தப் பூந்தோட்டப் பாதையில் சென்றது. அப்பொழுது அந்தத் தோட்டத்தில் இருந்த பூவை ஆடு பார்த்தது. அந்த ஆடு செடியை சாப்பிடச் சென்ற பொழுது அந்தப் பூ மிகவும் வருந்தியது. அதனைப் பார்த்த ஆடு பரிதாபப்பட்டு நான் உன்னை சாப்பிடமாட்டேன் என்று கூறியது.  ஆடும் பூவும் நண்பர்கள் ஆகினர்.


அப்பொழுது தேனி ஒன்று அந்தப் பூவில் தேனெடுக்க வந்தது.  அந்தத் தேனிக்கோ நண்பர்களே இல்லை. பூவையும் ஆட்டுக்குட்டியையும் பார்த்த தேனி என்னையும் உங்கள் நண்பனாக்கிக்கொள்வீர்களா? என ஆசையாகக் கேட்டது.  பூவும் ஆட்டுக்குட்டியும் உடனே சரி என்றன.  ஒருநாள் மூன்று பேரும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது தேனீ, நாம் அனைவரும் ஊரைச்சுற்றிப் பார்க்கச் செல்லலாமா என்று கேட்டது.  அப்பொழுது ஆட்டுக்குட்டி சரி என்று உடனே தலையாட்ட, பூவுக்கோ வருத்தமாகிவிட்டது.


உடனே ஆட்டுக்குட்டி பூவைப்பார்த்து ஏன் கவலைப்படுகிறாய் என்று கேட்டது. அதற்கு பூ, நீங்கள் இரண்டு பேரும் ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள் என்று பதில் சொன்னது.  நீ வரலையா? என்று ஆட்டுக்குட்டி விடாமல் கேட்க, நான் ஒரே இடத்தில் தான் இருக்க முடியும், எப்படி உங்களோடு வருவது? என்று சொன்னது பூ. அட, நாங்கள் இதை யோசிக்கவேயில்லையே என்று ரீங்காரமிட்டது தேனீ.

சரி, நாம் இந்த தோட்டத்திலேயே ஒரு விழா நடத்த ஏற்பாடு செய்யலாம் என்றது ஆட்டுக்குட்டி.  விழா ஏற்பாடு செய்யப்பட்டு எல்லா பறவைகளும் விலங்குகளும் அங்கே அழைத்துவரப்பட்டதில் மிகவும் சந்தோசப்பட்டு காற்றில் ஆடியது பூ.  பிரியாத அந்த மூன்று நண்பர்களும் பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி விழாவினை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.



(நண்பர்கள் குழுவான இணைந்து உருவாக்கிய கதை)

கவியரசு, மீரா, சந்தோஷ், பூபதி,
சத்யப்ரியா, லோகநாயகி, கௌதம்
புதுக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
காரமடை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

பூத்தொட்டி