சிறகு (மின்மினிகளின் கதை தேடி ……)




யாரெல்லாம் நட்சத்திரத்துக்கு வர்றீங்க

நான்

நான்

… … … ….

இதுக்கு முன்னாடி யாராவது அங்க போயிருக்கீங்களா ….

.

.

இல்ல ….

ம்..கூம்
.
நான் போயிருக்கேன்!

எப்பப்போன…!

நேத்து நைட்டு கனவுல….

கனவுலயா…. ! சொல்லீருந்தா நாங்களும் கூட வந்துருப்போம்ல…..
.
.
சரி, எதுக்கு அங்க போன…?

நட்சத்திரத்த தொட்டுப் பாக்கனும்ணு ஆசையா இருந்துச்சு, அதான் போனேண்.












கதைகளுக்குள் துலங்கும் பிரியங்களை நிஜமாக்கியும் கற்பனைகளை உன்னதமாக்கியும் ஒருங்கே அரவணைத்துக்கொள்ளும் விரல்கள் குழந்தைகளுடையது. ஆரஞ்சு நிறச் சூரியனின் பிரகாசத்தை, காட்டு மலரின் ஈரம் நிறைந்த மலர்ச்சியை, நிலத்தடி நீராய் நிறையும் அன்பை கதைகள் குழந்தைகளிடம் தினமும் எடுத்துச் செல்கின்றன. ஒரு குட்டி முயல் மிருதுவாக வளர்வதைப்போல், சிறு செடி தன் நிலத்தை இறுகப்பற்றி விருட்சமாக மாறுவதைப்போல், கடல் நீர் ஒவ்வொரு துளியாய்க் கிளம்பி மழை முகில்களாகத் திரள்வதைப்போல் குழந்தைகள் கதைகளுக்குள் உயரே நகர்ந்துகொண்டிருக்கிறார்கள. 

எவற்றின் சாயலும் இல்லாமல் கதை சொல்லும் ஆற்றலுள்ளவர்கள் குழந்தைகள். எந்தப் பயிற்சியும் தேவைப்படாத கதைசொல்லிகள். தனதான போக்கில் அவர்கள் நிகழ்த்தும் கதைகள் அவர்களின் எதிர்காலத்தின்மேல் குன்றாத ஒளியாக நிறைபவை. அந்த மின்மினிகளின் ஒளியைத்தேடி, அடர்ந்த வனம் பொழியும் மாறாத நேசம் கொண்ட குழந்தைகளைத்தேடி நாம் அலைய வேண்டாமா? அந்த தூய ஒளியில் தானும் வாழ்ந்துகொள்ளும் ஆவல் நிரம்பியவர்களாக உடன் பயணிக்கும் நண்பர்கள். அந்தக் குழந்தைகளின் சொற்களுக்கும் கதைகளுக்கும் கிடைத்துவிடும் இது போன்ற எளிய காதுகளால் ஒளி பூமியை நிறைக்கும் என்பதே மாறிவிடாத ஆசை. குழந்தைகளின் கதைகளை தேடிச்செல்லும் ஒரு நீண்ட பயணம்தான்சிறகு”. 

தொடர்ந்து நடைபெற்றுவரும்கதை விழா”, “கத கேப்போம்நிகழ்வுகளோடு இனிசிறகும் இந்த பயணத்தில் இணைந்துகொள்கிறது. சிறகுதமிழகத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளில், சூழல்களில், மனோபாவங்களில் வாழ்ந்துவரும் குழந்தைகளின் கதைகளை தொகுக்கும் எங்கள் முதல் முயற்சி. கதைகளுக்குள் ஊருடுவும் இந்தப் பயணத்தில் அந்தந்தப் பகுதி கதைசொல்லிகளும் கலைஞர்களும் இணைந்துகொள்ள அழைக்கிறோம். கதை தேடும் இந்தப் பாதையில் வெவ்வேறு நிலப்பகுதிகளின் கலாச்சாரமும், வரலாறும், கலைகளும், குழந்தைகளும் அவர்களின் கல்விச்சூழலும் வந்து நிறைய வேண்டும் என்ற தேடலும் உள்ளது. தொகுக்கப்படும் கதைகளுக்கு வரும் நாட்களில் குழந்தைகளே தங்கள் தேர்ந்த உணர்வுகளால் ஓவியங்கள் வரையவுள்ளார்கள். பின்னர் அந்த சித்திரங்களும் கதைகளும் தொடர்ந்து புத்தகங்களாக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தையையும் தேடிச்செல்லும். 

சிறகின் இந்தப் பயணத்தில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் அமைப்புகளும் இணைந்துகொள்ள அழைக்கிறோம். ஒவ்வொரு நிலப்பகுதி குழந்தைகளை சந்திக்கும்பொழுதும் குழந்தைகளுக்காக சிறப்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்ந்த கதைப்புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள நண்பர்கள் புத்தகங்கள் வழங்கும் பங்களிப்பைச் செய்யலாம். 

இன்று பிறந்த மின்மினிப்பூச்சியின் புதுசிறகு மெல்ல தன்னை அசைத்துப்பார்க்கிறது.

சிறகின் முதல் பயணம் நீலகிரி மாவட்டம் நோக்கி……

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி