அதிசய சிறுவன்



ஒரு ஊரில் ஒரு சிறிய வீடு. அந்த வீட்டில் ஒரு சிறுவன் மட்டும் இருந்தான்.  அவன் பெயர் சந்திரன்.  ஒருநாள் அவன் கடற்கரைக்குச் சென்றான்.  அங்கு ஒரு மீனைப் பிடித்தான்.  அதை அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அருகிலேயே தூங்கிவிட்டான். 

மறுநாள் அவன் உடம்பில் ஏதோ மாற்றம் வந்ததுபோல் உணர்ந்தான்.  ஆனால் ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டான். அடுத்த நாளும் உடம்பில் ஏதோ மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தான்.  மீண்டும் ஒன்றும் இல்லை என விட்டுவிட்டான். இப்படியே நாட்கள் செல்லச்செல்ல அவன் உடலில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. 

ஒருநாள் கடைக்குச் செல்லும்பொழுது ஒருவர் சந்திரனின் உடலில் ஏதோ வித்தியாசம் இருப்பதைப் பார்த்து விபரம் கேட்டார்.  அப்பொழுதும் அவன் யோசித்தான்.  மீண்டும் அவன் உடலில் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை நினைத்துக்கொண்டே நடந்தான். அப்பொழுது ஒரு யோசனை வந்தது.  ஒருநாள் முழுவதும் கண்ணாடிமுன் அமர்ந்து உடலையே கவனித்துக்கொண்டிருந்தால் என்ன நிகழ்கிறது என தெரிந்துகொள்ளலாம் என ஆசைப்பட்டான். 

நாளெல்லாம் கண்ணாடிமுன் நின்றவன் அவன் உடலைப் பார்த்து வியந்துபோனான்.  அவன் காலையில் குண்டாக இருந்தான், மதியம் ஒல்லியாக இருந்தான், மாலை குட்டையாக இருந்தான், இரவு உயரமாக இருந்தான்.  அவனுக்கு எப்பொழுதிருந்து அப்படி மாறியிருக்கும் என்று கண்ணாடி அருகில் நின்று யோசித்த வண்ணம் இருந்தான்.  அன்று கடற்கரையில் மீன் சாப்பிட்டதிலிருந்துதான் இப்படி ஆகியிருக்கும் என நம்பினான். உடனே வைத்தியரிடம்போய் இதைச் சொன்னான். இதற்கெல்லாம் மருந்தில்லை என்று வைத்தியர் சந்திரனை திரும்ப அனுப்பிவிட்டார்.

கவலையுடன் வீட்டிற்கு வந்தவன் வீட்டைப் பூட்டிவிட்டு காட்டிற்கு செல்ல நினைத்தான்.  அந்த காட்டிற்குள் இருக்கும் மரங்கள், செடிகள், வேர்கள், கொடிகள் அனைத்தையும் கொஞ்சம் வீட்டிற்கு எடுத்து வந்தான். எல்லாவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தும் ஒன்றும் மாறவில்லை.  ஆனால் விசித்திரமான ஒரு மாற்றம் தோன்றியது.  அவன் உடலில் மூக்கு, வாய், கை, கால், முதுகு, தலை என அனைத்திலிருந்தும் கிளைகளும் இலைகளும் முளைத்தன.

அழுதுகொண்டே அவன் காட்டிற்குள் ஓடினான். அவனைக் காண உடனே அனைத்து விலங்குகளும் பறவைகளும் விரைந்தன.  எதற்காக என்னிடம் வந்தீர்கள் என சந்திரன் ஆச்சரியப்பட்டான்.  உன்னை மீண்டும் மனிதனாக மாற்றுவதற்கான ஒரு மருந்து இருப்பதை அனைத்தும் சொல்லின.  வியப்போடு அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.  

வனத்தின் அடர்ந்த பகுதிக்குள் இருந்து எடுத்துவந்த வேறுவேறு வடிவ ஏழு இலைகளை அவனுக்குக் கொடுத்தன.  அவன் மீன் பிடித்த கடல் நீரில் அந்த ஏழு இலைகளையும் காய்ச்சி ஒரு வாரத்திற்கு குடித்தால் சரியாகி மீண்டும் மனிதனாவாய் என்றன. நாள் தவறாமல் அதைச் செய்தான். கிளைகளும் இலைகளும் மறைந்து மீண்டும் அவனுடைய சிறிய உருவத்திற்கு வந்த சந்திரன் உடனே வனத்திற்கு நன்றி சொல்ல குதித்து ஓடினான்.


S. ஸ்ரீஹரி (ஐந்தாம் வகுப்பு)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
காமராஜ் நகர், சுந்தராபுரம்,
கோயம்புத்தூர்.



நன்றி  : ஊஞ்சல் சிறார் மாத இதழ் (ஏப்ரல் 2015)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி